கர்நாடக காங்கிரசில் பிளவு - சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை தொடர்ந்து பரமேஸ்வர் தலைமையில் 3-வது அணி
கர்நாடக காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை தொடர்ந்து பரமேஸ்வர் தலைமையில் 3-வது அணி உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது
கர்நாடச சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. முதல்-மந்திரியாக ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரும் பதவி ஏற்றனர். இதில் பரமேஸ்வர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தொகுதியில்(தனி) இருந்து சட்டசபைக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டணி ஆட்சி ஒரே வருடத்தில் கவிழ்ந்தது. ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்தனர். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து 17 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தது. அதில் 15 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றிபெற்று கர்நாடகத்தில் ஆட்சி அமைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. தற்போது முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
கர்நாடக காங்கிரசில் பிளவு
இந்த நிலையில் கர்நாடகத்தில் 2023-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா ஆட்சி முடிய இன்னும் முழுமையாக 2 ஆண்டுகளுக்கும் மேல் உள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மூத்த தலைவர் சித்தராமையவின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் வெற்றிபெற்றால் அவர் தான் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ஜமீர் அகமது கான் உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் அந்த கருத்தை பகிரங்கமாக தெரிவித்தனர். இதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
அவர் முதல்-மந்திரி பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என்று கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுபற்றி கட்சி மேலிடத்திடமும் புகார் தெரிவித்து இருக்கிறார். ஏனெனில் டி.கே.சிவக்குமாரும் மறைமுகமாக முதல்-மந்திரி பதவிக்கு காய்நகர்த்தி வருகிறார். இதனால் கர்நாடக காங்கிரசில் பிளவு ஏற்பட்டு சித்தராமையாவின் தலைமையில் ஒரு அணியும், டி.கே.சிவக்குமாரின் தலைமையில் ஒரு அணியும் மறைமுகமாக செயல்பட்டு வருகிறது.
3-வது அணி உருவாகி...
ஆனால் சித்தராமையாவை தவிர்த்துவிட்டு காங்கிரசால் தேர்தலை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதன்காரணமாக அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கருத்து கூறக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடுத்த முதல்-மந்திரி குறித்து கருத்து கூறுவதை நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அணிகளை தொடர்ந்து இப்போது 3-வது அணி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பரமேஸ்வர், கே.எச்.முனியப்பா, பி.கே.ஹரிபிரசாத் ஆகியோர் ரகசியமாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுபற்றிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அணியில் இல்லாதவர்களை தங்கள் அணிக்கு இழுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், சிலர் தாங்களாகவே முன்வந்து பரமேஸ்வர் தலைமையிலான அணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலிட பொறுப்பாளர் வருகை
சட்டசபை தேர்தலுக்கு முன்பே காங்கிரசில் அணி அரசியல் தலைதூக்கியுள்ளதால் இது கட்சி மேலிடத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து வரும் நாட்களில் இந்த அணி அரசியல் மேலும் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆளும் பா.ஜனதாவில் முதல்-மந்திரி மாற்றம் குறித்த தகவல் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.
இப்போது இந்த குழப்பமான நிலை எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு மாறியுள்ளது. காங்கிரசில் நிலவும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விரைவில் கர்நாடகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story