தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முக்கிய ஊர்களுக்கு 240 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன


தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து  முக்கிய ஊர்களுக்கு 240 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 28 Jun 2021 6:20 PM IST (Updated: 28 Jun 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முக்கிய ஊர்களுக்கு 240 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முக்கிய ஊர்களுக்கு 240 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. 
கடந்த சில வாரங்களாக படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் 4 மாவட்டங்களில் மட்டுமே பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
240 பஸ்கள்
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 302 பஸ்கள் உள்ளன. இதில் 240 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில், திருச்செந்தூர், நெல்லை, கோவில்பட்டி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முகூர்த்த நாள் என்பதால் பெரும்பாலான பஸ்கள் நிரம்பி வழிந்தன. மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். தூத்துக்குடியில் இருந்து அனைத்து டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 100 டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்தனர்.
50 சதவீதம்
இதே போன்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து 20 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இதில் 18 பஸ்கள் வழக்கமான வழித்தடத்திலும், ஒரு பஸ் கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும் சென்னைக்கு இயக்கப்பட்டன. ஒரு பஸ் வேலூருக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் 50 சதவீதம் பயணிகள் நிரம்பி இருந்தனர். இதனால் பஸ்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி முழுமையாக இயங்கின. பயணிகள் வருகையை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story