தேனி மாவட்டத்தில் பொது போக்குவரத்து தொடக்கம் 100 சதவீதம் அரசு பஸ்கள் ஓடின
தேனி மாவட்டத்தில் ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு பொது போக்குவரத்து தொடங்கியது. 100 சதவீதம் அரசு பஸ்கள் ஓடின.
தேனி :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 10-ந்தேதி முதல் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கடந்த மாதம் 22 மற்றும் 23-ந்தேதிகளில் மட்டும் முழுமையாக தளர்வுகள் அளித்து பஸ்கள் இயக்கப்பட்டன. 24-ந்தேதியில் இருந்து மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி, தொற்று குறைந்த தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதியளித்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கியது.
தனியார் பஸ்கள் குறைவான அளவில் இயக்கப்பட்டன. அதே நேரத்தில் அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டன. தொற்று அதிகம் உள்ள மாவட்டங்கள் தவிர திண்டுக்கல், மதுரை, திருச்சி, நெல்லை, தென்காசி உள்பட பல இடங்களுக்கு தேனி மாவட்டத்தில் இருந்து அரசு பஸ்கள் இயங்கின.
100 சதவீதம் ஓடின
தேனியில் உள்ள கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் ஆகிய இரு இடங்களும் ஒரு மாதத்துக்கும் மேலாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் நேற்று பஸ்கள் இயக்கப்பட்டதால் வழக்கமான பரபரப்பு தொற்றிக் கொண்டது. இருப்பினும் பஸ் நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கடைகள் திறக்கப்பட்டன.
பஸ்களில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்தனர். 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்ததால், 2 பேர் அமரும் இருக்கையில் ஒருவரும், 3 பேர் அமரும் இருக்கையில் 2 பேர் வீதமும் அமர்ந்து பயணம் செய்தனர். பஸ்களில் பயணம் செய்த மக்களுக்கு சானிடைசர் வழங்கி கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும் பஸ்சில் ஏறும் முன்பு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் சுமார் 380 அரசு பஸ்கள் உள்ளன. அவை 100 சதவீதம் நேற்று இயக்கப்பட்டன. கேரள மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் கேரள மாநிலம் மற்றும் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், மாவட்டத்துக்குள்ளும், தொற்று குறைந்த பிற மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டன. பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, மக்கள் செல்லும் ஊர் அறிந்து அந்தந்த ஊர்களுக்கு பஸ்கள் உடனுக்குடன் இயக்கப்பட்டன. இதனால், மக்கள் அதிக அளவில் பயணம் செய்த போதும், பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை.
கலெக்டர் ஆய்வு
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று காலையில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயணம் செய்கிறார்களா? என சில பஸ்களில் அவர் ஏறி ஆய்வு செய்தார். முக கவசம் அணியாத யாரையும் பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
Related Tags :
Next Story