தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றாமல் அடுத்தடுத்து நடந்த 5 ஆர்ப்பாட்டங்கள்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றாமல் அடுத்தடுத்து 5 ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
தேனி :
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று வந்தனர். இதில் 5 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டு மாடு நலச்சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மேகதாது அணையை கட்டக்கூடாது, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ஆதி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் தமிழகத்தில் 115 சமூகங்களை சேர்ந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இடஒதுக்கீட்டில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சி.ஐ.டி.யு. உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் கொரோனா கால ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார்.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜதுரை தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பாரதீய இந்து பரிவார் அமைப்பு சார்பில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை கண்டித்தும், ஆகமவிதிகளின் படி செயல்பட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்துகொண்டனர்.
இந்த 5 ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலரும் கொரோனா தடுப்பு விதியான சமுக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக நின்று கோஷங்கள் எழுப்பினர். அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story