மணல் கடத்தல் விவகாரம் அரசு பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டரிடம் புகார்


மணல் கடத்தல் விவகாரம் அரசு பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 28 Jun 2021 7:40 PM IST (Updated: 28 Jun 2021 7:40 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தல் விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது.

தேனி:
தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் நிலஅளவராக பணியாற்றி வருகிறார். இவருடைய அண்ணன் ரவி மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் கலெக்டர் முரளிதரனிடம், செல்வராஜ் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், "கடந்த 7-ந்தேதி நான் தேவாரத்தில் இருந்து உத்தமபாளையத்துக்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்த போது தி.மு.க. நிர்வாகி ஒருவர் என்னை வழிமறித்தார். திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது குறித்து நான் புகார் அளித்ததாக கூறி என்னை மிரட்டினார். பின்னர் நான் அங்கிருந்து சென்று விட்டேன். இந்நிலையில் எனது அண்ணன் ரவி கடந்த 27-ந்தேதி தேவாரத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு வந்து கொண்டு இருந்தார். மணல் கடத்தும் கும்பலை சேர்ந்த சிலர் அவரை வழிமறித்து தாக்கினர். மணல் கடத்தல் குறித்து நான் புகார் அளித்ததாக கூறி எனது அண்ணனை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டனர். இதுபற்றி தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்தனர். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடமும் அவர்கள் இருவரும் புகார் கொடுத்தனர்.
அதுபோல், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை இழிவுபடுத்திய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வீர இந்து சேவா அமைப்பின் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Next Story