அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு ரூ.1,000 உதவித்தொகை ஆசிரியர்கள் அசத்தல்
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் ரூ.1,000 உதவித்தொகை வழங்கி அசத்தினர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி காமயகவுண்டன்பட்டி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் தலைமையாசிரியர் வீரமணி தலைமையில், ஆசிரியர்கள் மாதவன், ராஜா, ஷபி அகமது, ஆசிரியை ராதிகா ஆகியோர் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் தங்களது சம்பள பணத்தில் இருந்து 6-ம் வகுப்பு சேர்க்கைக்கு வரும் மாணவர்களின் பெற்றோருக்கு உதவித்தொகையாக ரூ.1000 வழங்கி வருகிறார்கள்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு நாங்கள் வழங்கும் உதவித்தொகை உதவியாக இருக்கும் என்று கருதி வழங்கி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story