மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய மத்தி மீன்கள்


மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய மத்தி மீன்கள்
x
தினத்தந்தி 28 Jun 2021 8:34 PM IST (Updated: 28 Jun 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே செருதூரில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மத்தி மீன்கள் சிக்கியது. நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே செருதூரில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மத்தி மீன்கள் சிக்கியது. நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
பைபர் படகு மீனவர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவர் கிராமத்தில் 2 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து  300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பைபர் படகு மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்தநிலையில் சில நாட்களாக செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அதிக அளவில் சிக்கிய மத்தி மீன்கள்
அப்போது மீனவர்களின் வலையில் அதிக அளவில் மத்தி மீன்கள் சிக்கியது. 
வலையில் சிக்கிய மத்தி மீன்களை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து ஐஸ் பெட்டிக்குள் வைத்து கேரளாவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். 
மத்தி மீன்கள் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விலை போனது. நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தினந்தோறும் 30-ல் இருந்து 35 டன் வரை மத்தி மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Next Story