ஈஸ்வரன் எம்.எல்.ஏ. உருவ பொம்மையை பா.ஜனதாவினர் எரிக்க முயற்சி


ஈஸ்வரன் எம்.எல்.ஏ. உருவ பொம்மையை பா.ஜனதாவினர் எரிக்க முயற்சி
x
தினத்தந்தி 28 Jun 2021 9:58 PM IST (Updated: 28 Jun 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

ஜெய்ஹிந்த் பற்றி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈஸ்வரன் எம்.எல்.ஏ. உருவபொம்மையை திண்டுக்கல்லில் பா.ஜனதாவினர் எரிக்க முயன்றனர். இதேபோல் இந்து முன்னணியினர் 108 தேங்காய்களை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

உருவபொம்மை எரிக்க முயற்சி 

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது ஜெய்ஹிந்த் எனும் வார்த்தையை கவர்னர் கூறாமல் விட்டது தொடர்பாக பேசினார். இதற்கு பா.ஜனதாவினர் கண்டனம் தெரிவித்தனர்.

 இதற்கிடையே ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியில் பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய தலைவர் வரதராஜன், பொதுச்செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், துணை தலைவர் தண்டபாணி, செயலாளர்கள் கார்த்திக் வினோத், பாலமுருகன், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் சுந்தர் உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஈஸ்வரன் எம்.எல்.ஏ. உருவபொம்மையை பா.ஜனதாவினர் எரிக்க முயன்றனர். 

அதை பார்த்த போலீசார் விரைவாக செயல்பட்டு உருவபொம்மையை எரிக்க விடாமல் பறித்தனர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதாவினர் கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தேங்காய் உடைத்து போராட்டம்

இதற்கிடையே ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணியினர் திரண்டனர். அதன்பின்னர் கோவில் முன்பு 108 தேங்காய்களை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள் சஞ்சீவிராஜ், வீரதிருமூர்த்தி, நகர தலைவர் ஞானசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story