ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் எதிரொலி: நகை, ஜவுளிக்கடைகள் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கின


ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் எதிரொலி: நகை, ஜவுளிக்கடைகள் திறப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கின
x
தினத்தந்தி 28 Jun 2021 10:31 PM IST (Updated: 28 Jun 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நகை, ஜவுளிக்கடைகள், திறக்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு இயங்கின.

விழுப்புரம், 

கொரோனா ஊரடங்கு

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் கூடுதல் தளர்வுகளையும் அறிவித்தார். இந்த கூடுதல் தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரடங்கு நேர தளர்வு எதிரொலியாக ஜவுளி மற்றும் நகை கடைகள் நேற்று முதல் செயல்பட தொடங்கின.

 நகை கடைகள் திறப்பு

குறிப்பாக 2 மாவட்டத்தில் உள்ள ஜவுளிக்கடைகள், நகை கடைகள் அனைத்தும் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் செயல்பட தொடங்கின. இந்த கடைகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்பட்டன. மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் சேவை மையங்கள், இதர தொழிற்சாலைகள் நேற்று முதல் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கின. அதுபோல் அனைத்து தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கின. அதேபோல் உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் குளிர்சாதன வசதியில்லாமல் ஒரே நேரத்தில் 50 சதவீத நபர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு செயல்பட்டன.

இயல்பு நிலைக்கு திரும்பிய மக்கள்

மேற்கண்ட கூடுதல் தளர்வுகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதனால் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Next Story