வாகன சோதனையில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்
மூங்கில்துறைப்பட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளரை தாக்கிய மினி லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
மூங்கில்துறைப்பட்டு
வாகன சோதனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையான மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்தில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் மற்றும் சுகாதார நிலையம் சார்பில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வாகனத்தில் வருபவர்கள் முக கவசம் அணிந்து உள்ளனரா?, வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் இருக்கிறதா? என்றும் சளி, இருமல் உள்ளதா? என பரிசோதனை நடத்தி நோய்தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
வாக்குவாதம்
வழக்கம்போல் நேற்று காலை மூங்கில்துறைப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பாலசேகர் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் மோட்டார் சைக்களில் வந்த 38 வயது மதிக்கத்தக்க நபரை வழிமறித்து ஏன் முககவசம் அணிய வில்லை? என்று சுகாதாரத்துறையினர் கேட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கும், சுகாதாரத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் சுகாதார ஆய்வாளர் பாலசேகரை தாக்கியதாக கூறப்படுகிறது.
மினிலாரி டிரைவர்
இதுகுறித்து மூங்கில்துறைபட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அவர் மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்த 38 வயதுடைய மினி லாரி டிரைவர் என்று கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவ அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சுகாதார ஆய்வாளரை தாக்கியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாகன சோதனையின்போது சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் மூங்கில்துறைப்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story