எள்ளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ததை கண்டித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்
விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரம்,
விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்யப்படும் நெல், உளுந்து, மணிலா, எள், சோளம் உள்ளிட்ட பயிர் வகைகளை விழுப்புரம் ஒழுங்முறை விற்பனைக்கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 100-க்கும் மேற்பட்ட எள் மூட்டைகள் வரத்து வந்தது. இவற்றை எடைபோட்டு கொள்முதல் செய்வதற்கு முன்பாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 80 கிலோ எடை கொண்ட எள் மூட்டை ஒன்றுக்கு ரூ.5,800 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையறிந்த எள் விவசாயிகள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் கடந்த வாரம் எள் மூட்டை ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மிகவும் குறைவாக ரூ.5,800 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டதை கண்டித்தும், நல்லெண்ணெய் லிட்டர் ஒன்று ரூ.340-க்கு விற்கிற நிலையில், எள்ளுக்கு தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை கட்டுப்படியாகாது என்றும், குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றுகூறி திடீரென ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு காலை 11.30 மணியளவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுபற்றி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக போலீசார் உறுதியளித்ததன்பேரில் காலை 11.40 மணியளவில் விவசாயிகள், மறியலை கைவிட்டனர்.
அதன்பிறகு விவசாயிகளிடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எள்ளுக்கு குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதை ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாததால் விவசாயிகள் பலர், எள் மூட்டைகளை விற்பனை செய்யவில்லை.. ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகத்தினர், விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படாமல் வியாபாரிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
Related Tags :
Next Story