அமலுக்கு வந்தது ஊரடங்கு தளர்வுகள்: கடலூரில் ஜவுளி, நகைக்கடைகள் திறப்பு மக்களின் இயல்பு நிலை திரும்புகிறது
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி கடலூரில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் திறக்கப்பட்டன.
கடலூர்,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மே மாதம் தொடக்கத்தில் ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவில் இயங்கி வந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
பின்னர் மே 10-ந் தேதி முழுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து வகை கடைகளும் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது.
அருங்காட்சியகங்கள் செயல்பட அனுமதி
அந்த வகையில் கடந்த 25-ந் தேதி வெளியிடப்பட்ட நீட்டிக்கப்பட்ட ஊரடங்கிலும், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.
அதன்படி பாத்திரக்கடைகள், பேன்சி அழகுசாதனப் பொருட்கள், சலவை, தையல், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்கவும், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவிகித நபர்களுடன் செயல்படவும், அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் வைக்கப்பட்டுள்ள மையமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் பொதுமக்கள் யாரும் எதிர்பாராத வகையில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
ஜவுளிக்கடைகள் திறப்பு
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், பேன்சி அழகுசாதனப் பொருட்கள், சலவை, தையல், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் சுமார் 1½ மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டன.
இதேபோல் உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்களும், அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் வைக்கப்பட்டுள்ள மையமும் நேற்று திறக்கப்பட்டு செயல்பட்டன.
மாவட்டத்தில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால் நீண்ட நாட்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய பொதுமக்கள் நேற்று கடைவீதிகளுக்கு படையெடுத்தனர். இதனால் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இயல்புநிலை திரும்புகிறது
மேலும் சாலைகளிலும் வழக்கம்போல் வாகன போக்குவரத்து காணப்பட்டது. கடலூர் நகரில் இம்பீரியல் சாலை, நேதாஜி சாலை, வண்டிப்பாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதன் மூலம் கூடுதல் தளர்வுகளால் மக்களின் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இதேபோல் மாவட்டத்தில் பிற பகுதியான சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், வேப்பூர், திட்டக்குடி,வடலூர், நெய்வேலி, பரங்கிப்பேட்டை என்று அனைத்து பகுதியிலும் ஜவுளி மற்றும்நகைக் கடைகள் மட்டுமின்றி தளர்வுகளில் தெரிவிக்கப்பட்டு இருந்த கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது.
Related Tags :
Next Story