குடிபோதையில் அரை நிர்வாணத்துடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது


குடிபோதையில் அரை நிர்வாணத்துடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2021 11:04 PM IST (Updated: 28 Jun 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை போலீஸ்நிலையம் முன்பு குடிபோதையில் அரைநிர்வாணத்துடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்

உளுந்தூர்பேட்டை

பஸ் கண்ணாடி உடைப்பு

திருச்சியில் இருந்து-சென்னைக்கு நேற்று காலை அரசு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நேற்று மதியம் உளுந்தூர்பேட்டை அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். 
சிலர் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் எல்லை மீறிய அந்த வாலிபர் பஸ்சின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை அடித்து உடைத்தார். இதையடுத்து பஸ் டிரைவர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு பஸ்சை நிறுத்திவிட்டு அங்கிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தரையில் அமர்ந்து ரகளை

ஆனால் அதற்குள் வாலிபர் பஸ்சில் இருந்து இறங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வந்து அரை நிர்வாணத்துடன் தரையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.  இதுபற்றி தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ரகளையில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால் அந்த வாலிபரிடம் இருந்து தகவல் எதையும் பெற முடியவில்லை.

கைது

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் போதை தெளிந்ததும் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள கண்டமா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார்(வயது 30) என்பது தெரியவந்தது. குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு பஸ் கண்ணாடியை உடைத்ததற்காக அவரை போலீசார் கைது செய்தனர். 

Next Story