ஆன்லைன் மோசடி கும்பலின் கைவரிசை அதிகரிப்பு சைபர் குற்றப்பிரிவில் 1000 புகார்கள் குவிந்தன
ஆன்லைன் மோசடி கும்பலின் கைவரிசை அதிகரிப்பால் சைபர் குற்றப் பிரிவில் 1000 புகார்கள் குவிந்துள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கோவை
ஆன்லைன் மோசடி கும்பலின் கைவரிசை அதிகரிப்பால் சைபர் குற்றப் பிரிவில் 1000 புகார்கள் குவிந்துள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
சைபர் குற்றங்கள்
கோவை மாநகரில் சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஜார்கண்ட் உள்பட வடமாநிலங்களில் இருந்து பொது மக்களின் செல்போன் எண்களை தெரிந்து கொண்டு போன் மூலம் தொடர்பு கொள்கிறார்கள்.
வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்களின் செல்போன் எண்ணுக்கு அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து அனுப்புவதுபோல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
அந்த குறுஞ்செய்தியில் அவர்களது வங்கி கணக்குடன் பான்கார்டு விவரங்கள் இணைக்க வேண்டி உள்ளதால் விவரங்களை மீண்டும் பதிவு செய்யவும் என்று குறிப்பிட்டு ஒரு இணையவழி தொடர்பு அனுப்பி வைக்கப்படுகிறது.
புதிது புதிதாக மோசடி
இதனை பார்ப்பவர்கள் வங்கியில் இருந்து வந்து இருப்பதாக ஏமாந்து இணையவழி தொடர்பில் உள் நுழையும்போது மோசடி கும்பல் அனைத்து தகவல்களையும் திருடி வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்து விடுகிறார்கள்.
இதேபோல் ஒருவரின் முகநூல் கணக்கை போல் போலி கணக்கை உருவாக்கி, அந்த முகநூலில் உள்ளவர் பண உதவி கேட்பதுபோல் மெசேஜ் அனுப்பியும் மோசடி நடைபெறுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்துக்கு தகுந்தவாறு புதிய, புதிய மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். கொரோனா காலம் என்பதால் கொரோனா உதவித்தொகை அனுப்ப வேண்டியது உள்ளது.
வங்கி கணக்கு எண், ரகசிய குறியீடு எண் ஆகியவற்றை கூறுமாறு தெரிவித்தும் மோசடி நடைபெறுகிறது.இந்த மோசடிகள் குறித்து கோவை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா கூறியதாவது:-
1000 புகார்கள்
கோவை மாநகரில் ஆன்லைன் மோசடி கும்பலின் கைவரிசை அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இது வரை 1000 புகார் மனுக்கள் வந்து உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் சைபர்கிரைம் பிரிவு, சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையமாக மாற்றப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக பதிவு செய்ததற்கான ரசீது வழங்கப்படுகிறது.
அதன்பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. ஆன்லைன் மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். மலிவாக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி தகவல் வந்தால் நம்பக்கூடாது.
ஏமாறக்கூடாது
வங்கிகளில் இருந்து தகவல் கேட்கப்படுவதாக கூறினாலும் எந்த தகவலையும் கூறக்கூடாது. சைபர்கிரைம் குற்றவாளிகள் பெரும்பாலும் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கைவரிசை காட்டுகிறார்கள்.
குற்றவாளி கள் சிம்கார்டுகளை அடிக்கடி மாற்றுவதால் கைது செய்வதில் சிரமம் உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்பாக செயல்பட்டு இதுபோன்ற கும்பலிடம் ஏமாந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story