பொங்கலூர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 போலீசார் கைது செய்யப்பட்டனர்
பொங்கலூர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 போலீசார் கைது செய்யப்பட்டனர்
பொங்கலூர்:
பொங்கலூர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மது விற்பனை
கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கள்ளத்தனமாக வெளிமாவட்டங்களில் இருந்து சிலர் மதுவை கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களை போலீசார் கைது செய்கிறார்கள். சட்டவிரோதமாக மதுவிற்பனையை தடுப்பதில் போலீசாரின் பங்கு மகத்தானது. ஆனால் போலீசாரே மது கடத்தினால் அவர்களை யார் கண்காணிப்பது! எப்படி தடுப்பது? இது வேலியே பயிரை மேய்ந்த கதை அல்லவா!.
இத்தகைய சம்பவம் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நடந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
தப்பி ஓடிய போலீஸ்காரர்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நேற்று முன்தினம் இரவு பல்லடத்தில் இருந்து தாராபுரம் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் கள்ளிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
அப்போது காரில் இருந்து போலீஸ் சீருடை அணிந்த ஒருவர் இறங்கி அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது காரினுள் மேலும் இருவர் இருந்தது தெரியவந்தது. மேலும் காரினுள் மது பாட்டில்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலையில் கிடந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும் காரில் இருந்த 70 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்கள் கடத்தல்
மேலும் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரின் அருகில் கிடந்த அடையாள அட்டையை எடுத்து போலீசார் பார்த்தனர். அது பல்லடம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் முத்துசுருளி (வயது 38) என்ற போலீஸ்காரரின் அடையாள அட்டை என்பது தெரியவந்தது. கார் விபத்துக்குள்ளானதும் தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அடையாள அட்டையை கூட தவறவிட்டது தெரியாமலும், காரில் இருந்த மற்ற 2 பேரின் கதி என்ன என்று தெரிந்துகொள்ளாமலும், தான் மட்டும் தப்பித்தால் போதும் என்று அவர் ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது.
அத்துடன் காரில் வந்தது மங்கலம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் துரைமுருகன் (30), பல்லடம் அவரப்பாளையத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் சின்னம்பலம் (35) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பணியிடை நீக்கம்
மதுபாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட முத்துசுருளி என்ற போலீஸ்காரர் ஏற்கனவே மங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றியபோது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போலீசாரே மதுபாட்டில்கள் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து போலீஸ்காரர்களான முத்துசுருளி மற்றும் துரைமுருகன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் 2 பேரும் மதுபாட்டில்களை எங்கு வாங்கினார்கள்?, எங்கே கடத்தி சென்றனர்?, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் யாருடையது? என்று தொடர் விசாரணை நடந்து வருகிறது. போலீஸ்காரர் கார் ஓட்டி சென்றால் அந்த காரை சோதனை சாவடியில் போலீசார் தணிக்கை செய்ய மாட்டார்கள். அதனால் துணிச்சலாக மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளதாகவும், கார் விபத்துக்குள்ளாகவில்லை என்றால் போலீஸ்காரர்கள் மதுபாட்டில்களை கடத்தி சென்றது வெளிச்சத்திற்கு வந்திருக்காது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story