ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதற்கு கலெக்டர் அலுவலகம் புறப்பட்ட 70 பேர் கைது; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
கைதி கொலை வழக்கு தொடர்பாக சிறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ரேஷன் கார்டுகளை நெல்லை கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
கைதி கொலை தொடர்பாக சிறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதற்கு நெல்லை கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதி கொலை
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமனோ (வயது 27). இவர் ஒரு கொலை முயற்சி வழக்கில் களக்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இவரை சிறை கைதிகள் தாக்கியதில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி முத்துமனோ இறந்தார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சில கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஜெயிலர், உதவி ஜெயிலர்கள் மற்றும் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஜெயில் சூப்பிரண்டும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
உறவினர்கள் போராட்டம்
கொலை செய்யப்பட்ட முத்து மனோவின் உடல் 69 நாட்களாக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பெற்றுச் செல்லுமாறு நீதிமன்றம் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறது. ஆனாலும் உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் முத்துமனோவின் கொலையில் ஜெயில் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவருடைய உறவினர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாக அறிவித்து இருந்தனர்.
போலீஸ் குவிப்பு
இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான போலீசார் முத்துமனோவின் சொந்த ஊரான வாகைகுளம் மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறை, நெல்லை அரசு மருத்துவமனை, வண்ணார்பேட்டை, நெல்லை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் குவிக்கப்பட்டனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு யாரும் செல்ல முடியாத அளவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அங்கு தடுப்பு கம்பிகளை வைத்து அடைக்கப்பட்டதால் மேலப்பாளையம் பகுதிக்கு எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
70 பேர் கைது
இதற்கிடையே வாகைகுளத்தில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கிராமத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்ட முத்துமனோவின் உறவினர்கள் 70 பேரை வாகைகுளத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நாங்குநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இதற்கிடையே முத்துமனோ கொலை தொடர்பாக நெல்லை ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார், களக்காடு போலீசார் உள்ளிட்ட 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில் குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story