பஸ்கள் ஓடின; ஜவுளி- நகைக்கடைகள் திறப்பு
மாவட்டங்களில் பஸ்கள் ஓடின. ஜவுளி- நகைக்கடைகள் திறக்கப்பட்டன.
பெரம்பலூர்:
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் 2-ம் அலையின் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் சில கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற 5-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஊரடங்கு நீட்டிப்பில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பெரம்பலூர்- அரியலூர் ஆகியவை 2-ம் வகை மாவட்டங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் ஏற்கனவே ஊரடங்கின்போது அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளுக்கு தற்போது கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் 2-வகையில் உள்ள பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்கவும், உடற்பயிற்சி கூடங்களை திறக்கவும், ஜவுளிக்கடை, நகைக்கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பஸ்கள் ஓடின
அதன்படி 35 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 6 மணி முதல் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அரசு பஸ்கள் ஓடின. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள மொத்தம் 95 பஸ்களில், 34 டவுன் பஸ்களும், 47 புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டன. அரசு உத்தரவின்படி டவுன் பஸ்களில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டது. காலை நேரத்தில் 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் பகல் நேரத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பால், பஸ்களில் அரசு அனுமதித்த எண்ணிக்கையைவிட அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டனர். சென்னை செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பயணிகள் அனைவரும் முககவசம் அணிந்து பயணம் செய்தனர்.
ஜவுளிக்கடை-நகைக்கடை
பெரம்பலூரில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லும் பஸ்கள் மாவட்ட எல்லையான உடும்பியம் வரை இயக்கப்பட்டது. அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் திருமானூர் வரையிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்கள் அணைக்கரை வரையிலும் இயக்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட மாவட்டங்களிடையே அரசு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நேற்று தனியார் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன.
ஊரடங்கினால் நீண்ட நாட்களாக மூடப்பட்டு காட்சியளித்த ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வியாபாரம் நடந்தது. இதேபோல் 50 சதவீத நபர்களுடன் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட்டன.
100 சதவீத பணியாளர்களுடன்...
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கியது. அனைத்து தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டது. இதர தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கின.
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பகுதியில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் குன்னம், வேப்பூர், புதுவேட்டக்குடி, அகரம்சீகூர், லப்பைக்குடிகாடு, கீழப்புலியூர் கீழப்பெரம்பலூர், ஒகளூர், அத்தியூர் ஆகிய ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. அரியலூருக்கும் பஸ்கள் இயக்கப்பட்டது. அனைத்து ஊர்களிலும் ஜவுளி, நகைக்கடை உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து தொடங்கியதன் விளைவாக குன்னம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற பொதுமக்கள் குவிந்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் மினி பஸ்களும் ஓடின. திருச்சி, தஞ்சை, பெரம்பலூரில் இருந்து வந்து செல்லும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பயணிகள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. ஆனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து சென்றதால் பஸ்களில் கூட்டம் இல்லை.
அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம், அணைக்கரை, பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் ஓடின. பயணிகள் அனைவரும் முக வசம் அணிந்திருந்தனர். நகரில் ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் கதவுகள் முழுவதும் திறக்கப்படாமல் சிறிய அளவில் திறக்கப்பட்டு குறைவான அளவிற்கே வாடிக்கையாளர்கள் ஜவுளி மற்றும் நகை வாங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வாசலில் கிருமிநாசினி, முக கவசம் வழங்கப்பட்டது. கடைகளின் உள்ளே சமூக இடைவெளி விட்டு நிற்க வைக்கப்பட்டனர். அதிக அளவு கூட்டம் வந்தால் வெளியில் காத்திருக்க வைத்து உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்த பிறகு அனுமதிக்கப்பட்டனர். உணவு விடுதிகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகளில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன. கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் முன்பு நடந்த வியாபாரம் தற்போது இல்லை என்று வியாபாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story