இரணியல் அரண்மனை சீரமைப்பு பணிகள்
ரூ.3.85 கோடி செலவில் இரணியல் அரண்மனை சீரமைப்பு பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
ரூ.3.85 கோடி செலவில் இரணியல் அரண்மனை சீரமைப்பு பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
முழு வீச்சில் பணிகள்
குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இரணியல் அரண்மனை சீரமைக்கப்படாமல் பொலிவிழந்து காணப்பட்டது. இதையடுத்து அரண்மனையை சீரமைக்க ரூ.3.85 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இரணியலில் அமைந்துள்ள அரண்மனை கி.பி. 12 - ம் நூற்றாண்டில் இருந்து வேணாட்டரசர்களின் தலைமையிடமாக செயல்பட்டு வந்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இது நீண்ட காலமாக பராமரிக்கப்படாத காரணத்தினால், தற்போது பொலிவு இழந்து காணப்படுகிறது. எனவே இதனை மறுசீரமைத்து, மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
சுற்றுலாத் தலமாக மாற்ற ஆய்வு
தற்போது நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடித்திட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சீரமைக்கும் பணிகளுக்கு அதிகமாக நிதி தேவைப்படும் பட்சத்தில் முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி, அதிக நிதியினை பெற்று, மறுசீரமைக்கும் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏ.வி.எம்.கால்வாய் நான்கு கட்டங்களாக தூர்வாரப்படும். முதலில் குளச்சல் முதல் மண்டைக்காடு வரையிலும், தேங்காப்பட்டணம் முதல் நீரோடி வரையிலும் அளவீடு செய்யும் பணி வருவாய் துறையின் வாயிலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்ததும் மத்திய நீர்வழிப்போக்குவரத்து துறையின் அமைச்சகத்தின் நிதி பங்களிப்புடனும், கால்வாயை சுற்றியுள்ள பொதுமக்களின் ஒத்துழைப்போடும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளது. இந்த சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தி, தொழில் சுற்றுலாத்தலமாக மாற்ற ஆய்வு மேற்கொண்டு, சுற்றறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
குளம் ஆய்வு
அதனைத்தொடர்ந்து, இரணியல் அரண்மனைக்குட்பட்ட மார்த்தாண்டேஸ்வரர் குளத்தில் பழுதடைந்துள்ள படிக்கட்டுகளை சீரமைப்பது குறித்து மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது பிரின்ஸ் எம்.எல்.ஏ., உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) ரத்தினவேல் பாண்டியன், மராமத்து பொறியாளர் அய்யப்பன், இரணியல் செயல் அலுவலர் சிவகாமிகந்தன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story