திருச்சியில் பழிக்குப்பழியாக தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக் கொலை 2 பேர் கைது


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 29 Jun 2021 1:40 AM IST (Updated: 29 Jun 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பழிக்குப்பழியாக தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி
முன்விரோதம்
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
திருச்சி பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 51). இவருடைய மகன் மணிகண்டன் (28). இவர் இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும், ஆடு, கோழிகளை வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வந்தார். 
அதே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதரை மணிகண்டன் பீர் பாட்டிலால் குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மணிகண்டனை தேடி வந்தனர். இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வீடு திரும்பினார்.
கத்தியால் குத்திக்கொலை
இதுபற்றி அறிந்த ஸ்ரீதரின் அண்ணன் டிங்கு என்கிற கமலக்கண்ணன் (40), அவரது நண்பர் பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த தங்கமுத்து (41) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை எடத்தெரு விறகுமந்தை அருகே மணிகண்டனை சந்தித்து ஸ்ரீதரை தாக்கியது தொடர்பாக தட்டி கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள், ஸ்ரீதரை கத்தியால் குத்தியதற்கு பழிவாங்கும் வகையில் மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதில் படுகாயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நேற்று காலை மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். 
2 பேர் கைது 
இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகுமாறன் வழக்குப்பதிந்து  கமலக்கண்ணன் மற்றும் தங்கமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
பாலக்கரை பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story