தம்பதியை கொன்று நகை கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது
குன்னம் அருகே தம்பதியை கொன்று நகைகொள்ளை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் புதிய தகவல் தெரியவந்துள்ளது.
குன்னம்:
தம்பதி கொலை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி அறிவழகி. வீட்டில் இருந்த இந்த தம்பதியை கடந்த 8-ந் தேதி மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை, மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
கைது
இந்நிலையில் இந்த வழக்கில் குன்னம் அருகே உள்ள மேல உசேன் நகரம் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மகன் மணிகண்டன்(வயது 21), செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த மாரி மகன் சத்யா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மேலே உசேன் நகரைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கத்தின் மகன் யுவராஜ் (26), ராமலிங்கம் மகன் ஸ்ரீராமகிருஷ்ணன் (23) ஆகியோரை கைது செய்தனர்.
நகை- பணத்தை நோட்டமிட்டு...
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் வட்டாரத்தில் கூறுகையில், மேலே உசேன் நகரம் பகுதியைச் சேர்ந்த சந்தோசுக்கும், பெரியசாமி குடும்பத்திற்கும் நன்கு அறிமுகம் இருந்துள்ளது. இந்நிலையில் சந்தோஷ், பெரியசாமி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில், அங்கு நகை மற்றும் பணம் இருப்பதை நோட்டமிட்டு, மூளையாக செயல்பட்டு, மணிகண்டன் மற்றும் சென்னையை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து இக்கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார் என்பது தெரியவந்தது என்று தெரிவித்தனர்.
இதில் 16 பவுன் நகை மற்றும் எல்.இ.டி. டி.வி., செல்போன், ஒரு ஜோடி கொலுசு மற்றும் ரூ.1 லட்சத்தை அவர்கள் கொள்ளையடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒருவரை குன்னம் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story