ககன்யான் திட்டத்திற்கு முன்னோட்டமாக வருகிற டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப திட்டம் - இஸ்ரோ தகவல்


ககன்யான் திட்டத்திற்கு முன்னோட்டமாக வருகிற டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப திட்டம் - இஸ்ரோ தகவல்
x
தினத்தந்தி 29 Jun 2021 1:53 AM IST (Updated: 29 Jun 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

ககன்யான் திட்டத்திற்கு முன்னோட்டமாக வருகிற டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

பெங்களூரு:

ககன்யான் திட்டம்

  75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) உதவியுடன் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

  இந்த திட்டத்திற்காக 4 வீரர்களை இஸ்ரோ தேர்வு செய்தது. தற்போது அவர்கள் 4 பேரும் ரஷியாவில் பயிற்சியில் உள்ளனர். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ ஆர்வத்துடன் முன்எடுத்து செய்தது. இந்த நிலையில் இஸ்ரோவின் முயற்சிக்கு கொரோனா ஊரடங்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளது.

வன்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்

  அதாவது ககன்யான் திட்ட பணிகளுக்காக வடிவமைப்பு, பகுப்பாய்வு இஸ்ரோவால் செயல்படுத்தப்படுகிறது. வன்பொருட்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் கிடைக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தபட்டதன் காரணமாக வன்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்து உள்ளது. இதனால் திட்டமிட்டப்பட்டபடி வருகிற 2022-ம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்த நிலையில் ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  ககன்யான் திட்டத்தின் நோக்கம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது ஆகும். 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வன்பொருட்களை பெறுவதில் சற்று சிரமம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணி நேரம், கூடுதல் வேலைகளை எடுத்து கொள்வோம்.

ஆளில்லா ராக்கெட்

  சில முக்கிய நடவடிக்கைகளை பெற பிரான்சு, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து உதவிகளை பெற முயற்சி செய்து வருகிறோம். இந்த நிலையில் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக 2 கட்ட சோதனைகளை செய்ய உள்ளோம்.

  முதற்கட்ட சோதனையாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட்டை பூமிக்கு அனுப்பி சோதனை நடத்தப்படும். 2-வது ஆளில்லா ராக்கெட்டை 2022-2023-ம் ஆண்டுக்குள் அனுப்பி சோதனை நடத்தப்படும்.
  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story