ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது


ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது
x
தினத்தந்தி 29 Jun 2021 2:15 AM IST (Updated: 29 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் அருகே ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதனால் மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் அருகே  ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதனால் மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 
மீன்பிடிக்க சென்றனர்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெரு கிராமத்தை சேர்ந்தவர் சக்திகுமார்( வயது39). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த நாகூர்பிச்சை(45), வேம்பு என்ற பாஞ்சாலன்(60), நந்தகுமார்(25), முருகேசன்(40) ஆகிய 5 பேரும் நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணியளவில் மீன்பிடிக்க கோடியக்கரை கடல்பகுதி நோக்கி சென்றனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று அதிகாலை கரை திரும்பிய போது முத்துப்பேட்டை கடல் பகுதியிலிருந்து சிறிது தொலைவில் திடீரென கடலில் எழும்பிய 
ராட்சத அலை காரணமாக படகு கவிழ்ந்தது. 
படகில் ஏறினர்
இதனால் கடலில் விழுந்த 5 மீனவர்களில் நந்தகுமார், முருகேசன், சக்திவேல் ஆகிய 3 மீனவர்கள் படகை பிடித்து கவிழ்ந்த படகை புறட்டி மீண்டும் படகில் ஏறினர். மற்ற 2 மீனவர்களான வேம்பு என்ற பாஞ்சாலன் மற்றும் நாகூர் பிச்சை இருவரையும் அலை இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த படகில் ஏறிய 3 மீனவர்களும் இது குறித்து தங்கள் கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தனர். 
கரைக்கு கொண்டு வந்தனர்
இதைத்தொடர்ந்து கரையூர் தெரு கிராம மீனவர்கள் படகு மூலம் கடலுக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 
கடலில் தத்தளித்து கொண்டிருந்த வேம்பு என்ற பாஞ்சாலன் மற்றும் நாகூர் பிச்சை ஆகிய 2 மீனவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் மீனவர் பாஞ்சாலன் கடல் நீரை அதிக அளவில் குடித்ததால் அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Next Story