கிருஷ்ணா ஆற்றில் மூழ்கி 4 சகோதரர்கள் சாவு
பெலகாவி அருகே, துணி துவைக்க சென்ற போது கிருஷ்ணா ஆற்றில் மூழ்கி 4 சகோதரர்கள் இறந்த சம்பவம் நடந்து உள்ளது.
பெலகாவி:
கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம்
வடகர்நாடக மாவட்டமான பெலகாவியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா ஹல்யா கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான பரசுராம் பனசோட், சங்கர் பனசோட், சதாசிவா பனசோட், தாரப்பா பனசோட் ஆகிய 4 பேரும் நேற்று மதியம் கிராமத்தில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் துணி துவைக்க சென்றனர்.
4 பேர் சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக பரசுராமும், சங்கரும் ஆற்றுக்குள் தவறி விழுந்து ஆழமான பகுதிக்கு சென்றனர். அவர்கள் 2 பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் ஆற்றில் தத்தளித்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதாசிவா, தாரப்பா ஆகியோர் பரசுராம், சங்கரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
உடல்கள் மீட்பு
இந்த நிலையில் ஆற்றுக்கு சென்ற சகோதரர்கள் 4 பேரும் வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர், உறவினர்கள் ஆற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது கரையில் 4 பேரின் துணிகளும் இருந்தன. ஆனால் 4 பேரையும் காணவில்லை. அவர்களை அக்கம்பக்கத்தில் உறவினர்கள் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. அப்போது தான் 4 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரிந்தது.
இதுகுறித்து அதானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த அதானி போலீசாரும், தீயணைப்பு படையினரும், உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் மூழ்கி இறந்த 4 சகோதரர்களின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 4 பேரின் உடல்களையும் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரைய வைக்கும் வகையில் இருந்தது.
பெரும் சோகம்
இதன்பின்னர் 4 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் மூழ்கி சகோதரர்கள் இறந்த சம்பவம் ஹல்யா கிராமத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story