கர்நாடகத்தில் வருகிற 19, 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு - 8¾ லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்


கர்நாடகத்தில் வருகிற 19, 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு - 8¾ லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 29 Jun 2021 2:21 AM IST (Updated: 29 Jun 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகளுடன் வருகிற 19 மற்றும் 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 8¾ லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

பெங்களூரு, ஜூன்.29-
  

சுரேஷ்குமார் ஆலோசனை

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பாதுகாப்பான முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார். இதற்கு பெற்றோர் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. 

  இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்துவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும், பள்ளி, கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர் மற்றும் நிபுணர்கள் குழுவினருடன் மந்திரி சுரேஷ்குமார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். நேற்றும் பெங்களூரு விகாச சவுதாவில் கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் அவர் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். பின்னர் மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

19, 22-ந் தேதிகளில்...

  கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்துவதற்கு பள்ளி, கல்வித்துறையும், அரசு முடிவு செய்திருந்தது. கொரோனா பரவலுக்கு மத்தியலும் இந்த தேர்வை பாதுகாப்பாகவும், மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.

  கொரோனா நிபுணர்கள் குழுவினர், குழந்தைகள் நல நிபுணர்கள், பெற்றோர்களின் கருத்தை கேட்டும், அவர்களது ஆலோசனைகளின் படியும் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் (ஜூலை) 19 மற்றும் 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற இருக்கிறது.

கடும் கட்டுப்பாடுகள்

  ஜூலை 19-ந் தேதி கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு ஒரே நாளில் நடக்கிறது. ஜூலை 22-ந் தேதி மொழிப்பாடங்களுக்கான தோ்வு நடக்கிறது. இந்த 2 தேர்வுகளிலும் ஒரு மதிப்பெண் கேள்விகளாகவே இருக்கும். இந்த தேர்வை மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 581 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 666 மையங்களில் தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

  கொரோனா காரணமாக தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. மேலும் கடும் கட்டுப்பாாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் தனித்தனியாக அமர்ந்து தான் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பெஞ்சில் ஒருவர் வீதம் ஒரு அறையில் 12 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு (2020) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் 6 நாட்கள் நடைபெற்றது. இந்த ஆண்டு 2 நாட்களிலேயே தேர்வு நடத்தி முடிக்கப்படுகிறது.

தடுப்பூசி போடுவது கட்டாயம்

  தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். தேர்வு அறைகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். மாணவ, மாணவிகள் முக்கவசம் அணிந்து கொண்டு தான் தேர்வு எழுத வேண்டும். அவர்களுக்கு கல்வித்துறை சார்பில் என்.95 முகக்கவசம் வழங்கப்படும். தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளின் உடல் வெப்ப நிலை உள்ளிட்டவை பரிசோதிக்கப்படும். யாருக்காவது கொரோனா அறிகுறிகள் இருந்தால், அவர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

  அதுபோல், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் கண்டிப்பாக ஒரு முறையாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே தேர்வு நடைபெறும் மையங்களில் அனுமதிக்கப்படுவாா்கள்.

பள்ளிகள் திறப்பு எப்போது?

  கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு சென்ற மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கோ, பிற தோ்வு மையங்களுக்கோ சென்று தான் தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்களா, அங்கிருந்தபடியே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி கொள்ளலாம். இதற்காக கல்வித்துறையிடம் அனுமதி பெற்றால் போதும். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்போது தாங்கள் இருக்கும் பகுதியில் வைத்து தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.

  அதுபோல், மற்ற மாணவ-மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். எந்த ஒரு மாணவ, மாணவிகளும், பெற்றோரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் மிகவும் முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக தற்போது பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் அரசு முடிவு எடுக்கவில்லை. இதுதொடர்பாக நிபுணர்கள் குழுவினர், முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசித்து தான் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.
  இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

Next Story