ஊரடங்கில் கூடுதல் தளர்வு: சேலம் மாவட்டத்தில் சலூன், டீக்கடைகள் திறப்பு சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு


ஊரடங்கில் கூடுதல் தளர்வு: சேலம் மாவட்டத்தில் சலூன், டீக்கடைகள் திறப்பு சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 3:30 AM IST (Updated: 29 Jun 2021 3:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் சலூன், டீக்கடைகள் திறக்கப்பட்டன. அதேநேரத்தில் சாலையில் வாகன போக்குவரத்தும் அதிகமாக காணப்பட்டது.

சேலம்
கூடுதல் தளர்வு
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் நேற்று நடைமுறைக்கு வந்துள்ளதால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. 
கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் நேற்று முதல் சலூன், டீக்கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. 
கடந்த 50 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறக்கப்பட்டதால் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேநேரத்தில் டீக்கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
பல நாட்களுக்கு பிறகு நேற்று டீக்கடைகள் திறக்கப்பட்டதால் அதிகாலையிலேயே அதன் உரிமையாளர்கள் பூஜை செய்து பணிகளை தொடங்கினர். டீ, காபி பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. அமர்ந்து சாப்பிட உரிமையாளர்கள் தடை விதித்தனர்.
சலூன் கடைகள்
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, செவ்வாய்பேட்டை, பெரமனூர் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலை சலூன் கடைகளும், டீக்கடைகளும் திறக்கப்பட்டன. சலூன் கடையில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர அனுமதி அளிக்கப்பட்டது. 
முடிதிருத்தும் தொழிலாளர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிந்தவாறு முகச்சவரம் மற்றும் முடி திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் கடைகள், ஹார்டுவேர் கடைகள், கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பாத்திரக் கடைகள், பேன்சி ஸ்டோர், செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், அழகு சாதன பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகள், ஜெராக்ஸ், சலவை, தையல், அச்சகங்கள், காலணி விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்பட்டன. 
சேலம் கடைவீதியில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை. அதேநேரத்தில் மற்ற கடைகள் திறக்கப்பட்டதால் பல்வேறு பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் முடங்கி கிடந்த தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன.
இயல்பு வாழ்க்கை
சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் நேற்று காலை முதல் பல்வேறு கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றதை காணமுடிந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி உள்ளதாக தெரிகிறது. 
சேலத்தில் முக்கிய சாலைகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. சேலம் செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், லீ பஜார், சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், 5 ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கொரோனா பரவல் இன்னும் முடியாத நிலையில் பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். அதேபோன்று பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் அந்த கடைகள் பூட்டிக்கிடந்தன.
இ-சேவை மையங்கள்
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையங்களும் வழக்கம் போல் நேற்று செயல்பட்டன. இதனால் பல்வேறு சான்றிதழ்கள் பெறவும், அரசின் நிதியுதவி பெறுவதற்காகவும் பயனாளிகள் இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர்.


Next Story