மது குடிக்க மனைவி பணம் தராததால் சொந்த வீட்டுக்கு தீ வைத்த லாரி டிரைவர் கைது வாழப்பாடி அருகே பரபரப்பு


மது குடிக்க மனைவி பணம் தராததால் சொந்த வீட்டுக்கு தீ வைத்த லாரி டிரைவர் கைது வாழப்பாடி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 3:30 AM IST (Updated: 29 Jun 2021 3:30 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே மது குடிப்பதற்கு மனைவி பணம் தராததால் மதுபோதையில் ஆத்திரமடைந்து, சொந்த வீட்டுக்கு தீ வைத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வாழப்பாடி
லாரி டிரைவர்
வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 40), லாரி டிரைவர். இவருடைய மனைவி பிரேமகுமாரி (34). இவர் கணவர் மற்றும் 3 மகன்களுடன், தனது தந்தை கொடுத்த வீட்டில் வசித்து வந்தார். 
தட்சணாமூர்த்தி லாரி ஓட்டுவதால், அடிக்கடி வெளி மாநிலத்திற்கு சென்று வந்தார். இவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீடு திரும்பிய தட்சணாமூர்த்தி, குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
சொந்த வீட்டுக்கு 
இதனால் பாதிக்கப்பட்ட பிரேமகுமாரி, தனது கணவர் மீது புகார் கொடுக்க நேற்று காலை வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டார். ஆத்திரமடைந்த தட்சணாமூர்த்தி குடிபோதையில் நேற்று மதியம் தனது வீட்டிற்கு தீ வைத்து விட்டார். 
இதில் வீட்டில் இருந்த துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, மகன்களின் பள்ளி சான்றிதழ்கள், தங்க நகை உள்ளிட்ட ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இதுமட்டுமின்றி, வீட்டிற்கு அருகில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான சோலார் மின் தகடுகளை தட்சணாமூர்த்தி கல்லால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார். இதனால் மொத்தம் ரூ.6½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
கைது
இதுகுறித்து பிரேமகுமாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையிலான போலீசார் தட்சிணாமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
குடி போதையில் சொந்த வீட்டுக்கு தீ வைத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story