2 மாதங்களுக்கு பிறகு புராதன சின்னங்கள் திறப்பு: சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு வழிகாட்டு நெறிமுறைகளுடன் புராதன சின்னங்கள் திறக்கப்பட்டாலும் போதிய சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது.
மாமல்லபுரம்,
கொரோனா ஊரடங்கால் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டு கடந்த 2 மாதமாக புராதன சின்னங்கள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து தமிழக அரசு அளித்துள்ள தளர்வின்படி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்கள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டன.
பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா தொற்று பரவும் என்பதால் பணம் பெற்றுக்கொண்டு நுழைவு சீட்டு வழங்கும் கட்டண மையங்கள் செயல்படும் ஐந்துரதம், கடற்கரை கோவில் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள நுழைவு சீட்டு கவுண்ட்டர்கள் மூடப்பட்டன. இணைய தளம் மூலம் ரூ.40 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆன்லைன் டிக்கட் பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என மொத்தம் 7 மணி நேரம் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தொல்லியல் துறை அறிவித்து உள்ளது.
நேற்று புராதன சின்னங்கள் திறக்கப்பட்ட முதல் நாள் குறைவான சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர். ஆனால் காதல் ஜோடிகளே அதிகளவில் காணப்பட்டனர். ஆனால் குடும்பம், குடும்பமாக வரும் பயணிகள் கூட்டம் இன்றி கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
நேற்று சுற்றுலா வந்தவர்கள் முக்கிய புராதன மைய நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தபிறகு, முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே புராதன சின்னங்களுக்குள் சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story