சாணார்பட்டி அருகே போலி டாக்டர் கைது


சாணார்பட்டி அருகே போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 6:02 PM IST (Updated: 29 Jun 2021 6:02 PM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். அவரது மருத்துவமனைக்கு ‘சீல்' செய்யப்பட்டது.


கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள அய்யாபட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55). இவர், அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். அங்கு அவர், அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு படிக்காமல் இவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் சிவக்குமார், கொசவப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் காளியப்பனின் மருத்துவமனைக்கு திடீரென சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்பதையும், நோயாளிகளுக்கு காளியப்பன் சிகிச்சை அளித்து கொண்டிருப்பதையும் பார்த்தனர். இதனையடுத்து காளியப்பனிடம் மருத்துவம் படித்ததற்கான ஆதாரத்தை கேட்டனர். ஆனால் அவரிடம் எதுவும் இல்லை. இதேபோல் இந்திய மருத்துவ கவுன்சிலில் அவர் எந்த அங்கீகாரமும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் நலப்பணிகள் இணை இயக்குனர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர். மேலும் அவர் நடத்தி வந்த மருத்துவமனையும் ‘சீல்' வைக்கப்பட்டது. கைதான காளியப்பன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களை பிடிக்க சுகாதாரத்துறையினரை கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  


Next Story