ஆண்டிப்பட்டி அருகே சமத்துவபுரங்களில் கலெக்டர் ஆய்வு
ஆண்டிப்பட்டி அருகே சமத்துபுரங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆண்டிப்பட்டி:
மாநிலம் முழுவதும் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி, தேக்கம்பட்டி கிராமங்களில் உள்ள சமத்துவபுரங்களில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, சமத்துவபுரங்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு வசிக்கும் பொதுமக்களிடம், சமத்துவபுரத்திற்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. ஆய்வின் முடிவில் சமத்துவபுரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த மதிப்பீடு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மதிப்பீடு பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மணி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அண்ணாதுரை, ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் சமத்துவபுரங்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story