கூடலூரில் சொந்த செலவில் வரத்துக்கால்வாய்களை சீரமைக்கும் விவசாயிகள்
கூடலூரில் சொந்த செலவில் வரத்துக்கால்வாய்களை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகள் பாசன வசதி பெற்று வருகிறது. இங்குள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலத்தில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.
தற்போது முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால் கூடலூர் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து வயல்வெளிகளுக்கு செல்லும் வரத்துக்கால்வாய்களில் முட்புதர்கள், செடிகொடிகள் வளர்ந்து தண்ணீர் வரும் பாதையை அடைத்திருந்தது.
இதனால் வயல்வெளிகளுக்கு தண்ணீர் சீராக வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பே, வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு கொடுத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் விவசாயிகள் தங்களது சொந்த செலவில் வரத்துக்கால்வாய்களை சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி, கூடலூர் பகுதி விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.800 வீதம் நிதிதிரட்டி வயல்வெளிகளுக்கு வரும் வரத்துக்கால்வாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story