நாமக்கல், ராசிபுரத்தில் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது


நாமக்கல், ராசிபுரத்தில் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது
x
தினத்தந்தி 29 Jun 2021 9:44 PM IST (Updated: 29 Jun 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல், ராசிபுரம் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது.

நாமக்கல்
நாமக்கல், ராசிபுரம் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது.
 ஜமாபந்தி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு உதவி கலெக்டர் கோட்டைக்குமார் தலைமை தாங்கி, செல்லப்பம்பட்டி, கலங்காணி, ஏளூர், தாளம்பாடி உள்ளிட்ட 28 கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை பதிவேடு, பிறப்பு இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை தனித்தனியே பார்வையிட்டு சரிபார்த்தார்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படுவதில்லை என்றும், பொதுமக்கள் ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்களை https://gdp.tn.gov.in/jamabandhi/ என்ற இணையதள முகவரியிலோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாசில்தார் தமிழ்மணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்
ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. ஜமாபந்தியில் மங்களபுரம், மத்துருட்டு, அரியாக்கவுண்டம்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம கணக்குகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார். இதில் தாசில்தார் ராஜேஷ்கண்ணா, தனி தாசில்தார் திருமுருகன், வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
இன்று (புதன்கிழமை) குருக்கபுரம், கோனேரிப்பட்டி, கூனவேலம்பட்டி, பிள்ளாநல்லூர், பொன்குறிச்சி உள்பட பல்வேறு கிராம கணக்குகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்ய உள்ளார்.

Next Story