`ஜாக்கி'கள் மூலம் தரைமட்டத்தில் இருந்து 4 அடி உயர்த்தப்பட்ட வீடு


`ஜாக்கிகள் மூலம் தரைமட்டத்தில் இருந்து 4 அடி உயர்த்தப்பட்ட வீடு
x
தினத்தந்தி 29 Jun 2021 4:55 PM GMT (Updated: 29 Jun 2021 4:56 PM GMT)

புதுக்கோட்டையில் `ஜாக்கி'கள் மூலம் ஒரு வீடு தரைமட்டத்தில் இருந்து 4 அடி உயரம் உயர்த்தப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் `ஜாக்கி'கள் மூலம் ஒரு வீடு தரைமட்டத்தில் இருந்து 4 அடி உயரம் உயர்த்தப்பட்டது.

நவீன தொழில்நுட்பம் கட்டிடங்களை தரைமட்டத்தில் இருந்து உயர்த்தவும், சற்று நகர்த்தி வைக்கவும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் பெருநகரங்களில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையிலும் ஓரிரு இடங்களில் இந்த தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஒரு வீட்டை 4 அடி உயரம் தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை பெரியார் நகரில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது வீடுகளுக்குள் புகுந்துவிடுவது வழக்கம். இந்த நிலையில் அப்பகுதியில் செந்தில்குமார் என்பவர் தனது வீட்டில் மழைநீர் புகாமல் இருக்க தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் அமைந்துள்ள வீட்டின் தரைமட்டத்தை உயர்த்த திட்டமிட்டார். மேலும் கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நவீன தொழில்நுட்ப முறையில் தரைமட்டத்தை உயர்த்த என்ஜினீயர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் `ஜாக்கி'கள் மூலம் உயர்த்தும் திட்டத்தை தெரிவித்தனர்.

250 `ஜாக்கி’கள்

அதன்படி `ஜாக்கி'கள் மூலம் கட்டிடங்களை சேதாரம் இல்லாமல் நகர்த்தி, தரைமட்டத்தை உயா்த்தும் முறையை என்ஜினீயர்கள் கையாண்டனர். இதற்கான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை வரவழைத்து வீட்டின் தரைமட்டத்தை தோண்டி அதில் ஜாக்கிகள் வைத்து 4 அடி உயரத்திற்கு வீட்டின் கட்டிடத்தை உயர்த்தினர். இதில் கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உயர்த்தப்பட்ட 4 அடி உயரத்திற்கு செங்கல்கள் வைத்து சுவர் எழுப்பி தரைமட்டம் பலப்படுத்து பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணி குறித்து என்ஜினீயர் கணேசன் கூறுகையில், ``250 டன் எடையுள்ள
இந்த வீட்டின் தரைமட்டத்தை உயர்த்த 250 `ஜாக்கி'கள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு அடியாக `ஜாக்கி'கள் மூலம் கட்டிடம் உயர்த்தப்பட்டன. இந்த பணி முழுமையாக முடிவடைய மொத்தம் 40 நாட்கள் ஆகும். இவ்வாறு உயர்த்துவதினால் கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் வராது. பாதுகாப்பான முறையில் தரைமட்டம் இருக்கும்'' என்றார். `ஜாக்கி'கள் மூலம் ஒரு வீட்டின் கட்டிடம் உயர்த்தப்பட்டதை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.

Related Tags :
Next Story