கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானையின் உடல்நிலை முன்னேற்றம்


கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானையின் உடல்நிலை முன்னேற்றம்
x
தினத்தந்தி 29 Jun 2021 10:42 PM IST (Updated: 29 Jun 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கூடலூர்,

கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த காட்டு யானை

கூடலூர் நகருக்குள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காயத்துடன் ஒரு காட்டு யானை சுற்றி வந்தது. மேலும் நாளுக்கு நாள் யானையின் உடல் மிகவும் மோசமடைந்து வந்தது. இதனால் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே காட்டு யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 17-ம் தேதி கூடலூர் மார்தோமா நகர் ஈப்பன் காடு பகுதியில் நின்றிருந்த காட்டு யானையை வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர். பின்னர் லாரியில் ஏற்றி முதுமலை அபயாரண்யம் முகாமில் அமைக்கப்பட்டு இருந்த மரக்கூண்டில் அடைத்தனர். 

தொடர்ந்து கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை தொடங்கினர். அப்போது யானையின் உடலில் உள்ள காயம் குணமடைவதற்கு குறைந்தது 10 மாதங்கள் ஆகும் என தெரிவித்தனர்.

உடல்நிலை முன்னேற்றம்

இந்த நிலையில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள காட்டு யானைக்கு வனத் துறையினர் கடந்த 11 நாட்களாக தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் யானைக்கு ராகி, கொள்ளு, அரிசி, தேங்காய் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள், பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதனால் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

காட்டு யானையின் உடலில் உள்ள காயம் மிகவும் மோசமாக இருந்தது. தற்போது தொடர் சிகிச்சை அளித்து வருவதால் காயம் குணமடைந்து வருகிறது. மேலும் யானையும் உணவுகள் மற்றும் பசுந்தீவனங்களை சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமாக உள்ளது. 

இன்றும் சில மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அதன்பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு பிறகு காட்டு யானையை மரக்கூண்டில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story