ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது


ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 29 Jun 2021 10:43 PM IST (Updated: 29 Jun 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி(வயது 22). நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவரை பிரசவத்துக்காக களமருதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு புவனேஸ்வரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

  இதையடுத்து 108 ஆம்புலன்சில் புவனேஸ்வரியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். மருத்துவ உதவியாளர் காயத்திரி உடன் இருந்து அவரை கவனித்தார். ஆம்புலன்சை பழனிச்சாமி என்பவர் ஓட்டினார். உளுந்தூர்பேட்டையை கடந்து குமாரமங்கலம் காப்புகாடு அருகே ஆம்புலன்ஸ் வந்த போது புவனேஸ்வரிக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. இதனால் நிலமையை உணர்ந்து கொண்ட மருத்துவ உதவியாளர் காயத்திரி பிரசவம் பார்த்தார். அப்போது புவனேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய்-சேய் இருவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாய்-சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story