நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 100 இடங்களில் ஆர்ப்பாட்டம்


நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 100 இடங்களில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2021 10:43 PM IST (Updated: 29 Jun 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 75 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஊட்டி,

நீலகிரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை  கண்டித்து 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 75 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வருமானம் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் தலைமை தாங்கினார். ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மலை மாவட்டமான நீலகிரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102-ஐ நெருங்கி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் இருக்கிறது. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் வாடகை கட்டணம் அதிகரிக்கும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

 எனவே, டீசல், பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழகத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்ததை அடுத்து, 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கூடலூரில்

கூடலூரில் கம்யூனிஸ்டுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வாசு தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முகமது கனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன், ராஜேந்திர பிரபு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி சின்ன சூண்டி பஜாரில் நட்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி துயில் மேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மண் வயல் பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி சி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரை தூக்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். தேவர்சோலையில் நாசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோத்தகிரி

கோத்தகிரியில் கூட்டுக்குழு சார்பில் மார்க்கெட் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோத்தகிரி தாலுகா செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மண்ணரசன், சி. ஐ.டி.யு. மண்டல துணை செயலாளர் சாமிநாதன், கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சோழா மகேஷ், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

75 பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஊட்டியில் 15 பேர் மீதும், கூடலூரில் 28 பேர் மீதும், தேவர்சோலையில் 10 பேர் மீதும், கோத்தகிரியில் 22 பேர் மீதும் என மொத்தம் 75 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story