ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
சம்பளம் வழங்க வலியுறுத்தி ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
சம்பளம் வழங்க வலியுறுத்தி ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 170 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 16 வார்டுகளில் வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மே மாதம் சம்பளம் வழங்கவில்லை.
தொடர்ந்து சம்பளம் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இதை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கூறியதை தொடர்ந்து, வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சரஸ்வதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மே மாத சம்பளத்தை தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதில் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சம்பளம் வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
வேலைநிறுத்தம் தொடரும்
போராட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் வேலை வாங்குவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. நேற்று மதியத்துக்கு பின்னர் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்லவில்லை. தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறுகையில், இன்று (அதாவது நேற்று) நடந்த பேச்சுவார்த்தையில் நகராட்சி ஆணையாளர் சம்பளம் வழங்குவது குறித்து முடிவு செய்யவில்லை. இதனால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். நாங்கள் குப்பைகளை சேகரிப்பதுடன் தரம் பிரித்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
கடந்த மாதம் சம்பளம் வழங்காத நிலையில், நடப்பு மாதம் முடிய உள்ளது. எனவே, 2 மாத ஊதியத்தை குறித்த தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story