கோவில்பட்டியில் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கிய தீப்பெட்டி தொழிற்சாலைகள்
கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட தொடங்கி உள்ளது.
கோவில்பட்டி:
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விருதுநகர், தென்காசி, நெல்லை, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், அதன் சார்பு தொழிற்சாலைகள் 2 ஆயிரம் என மொத்தம் 2 ஆயிரத்து 300 தொழிற்சாலைகள் தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றன. இதனை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக 40 நாட்கள் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்ட நிலையில் கடந்த 2-ந்தேதி 50 சதவீத பணியாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கின.
இந்த நிலையில் நேற்று முதல் 100 சதவீத பணியாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தீப்பெட்டி ஆலைகளில் 100 சதவீத பணியாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கி உள்ளன. இதேபோன்று கோவில்பட்டி பகுதியில் 100 சதவீதம் பணியாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கியது. முககவசம் அணிந்த பணியாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி கடைபிடித்து பணியாளர்கள் வேலை பார்க்கும் வகையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர் கருப்பசாமி கூறுகையில், ‘நேற்று முதல் தொழிலாளர்கள் முழுமையாக பணியாற்றி வருகின்றனர். அனைவரும் முககவசம் அணிந்து இருப்பது மட்டுமின்றி, சமூக இடைவெளியுடன் பணியாற்றுகின்றனர். தொடக்கத்தில் தீப்பெட்டி மூலப்பொருட்கள் தட்டுப்பாடு இருந்த நிலையில், தற்போது மூலப்பொருட்கள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் 100 சதவீத தொழிலாளர்களும் வேலைக்கு வந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி அதிகரிக்கும்’ என்றார்.
Related Tags :
Next Story