கடலூர் முதுநகர் அருகே பரபரப்பு முந்திரி தோப்பில் தொழிலாளி பிணம் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்
கடலூர் முதுநகர் அருகே முந்திரி தோப்பில் தொழிலாளி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள தியாகவல்லி கிராமத்தை சேர்ந்தவர் முருகப்பன். இவருடைய மகன் பவுன்ராஜ் (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில், பவுன்ராஜ் அந்த பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் ஒரு மரத்தில் நேற்று தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், பவுன்ராஜ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு சென்று, பிணமாக கிடந்த பவுன்ராஜ் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே தகவல் அறிந்த கடலூர் துறைமுக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாவில் சந்தேகம்
இதற்கிடையே பவுன்ராஜியின் கால் பாதங்களில் ரத்த காயங்கள் இருந்துள்ளது. இதன் மூலம் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முருகப்பன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பவுன்ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story