முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: சசிகலா உள்பட 501 பேர் மீது வழக்கு திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது


முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: சசிகலா உள்பட 501 பேர் மீது வழக்கு  திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது
x
தினத்தந்தி 29 Jun 2021 11:17 PM IST (Updated: 29 Jun 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா உள்பட 501 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டிவனம், 

கொலை மிரட்டல்

விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கடந்த 9-ந்தேதி திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 7-ந்தேதி வி.கே.சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளை தெரிவித்தேன். அதற்கு வி.கே.சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், தன் அடியாட்களை வைத்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள். மேலும் செல்போனிலும் என்னை அச்சுறுத்தும் வகையில் 500 பேர் கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். 

சசிகலா மீது வழக்குப்பதிவு 

செல்போன், சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வி.கே.சசிகலா பற்றி பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். இதற்கு வி.கே.சசிகலாவின் தூண்டுதலே காரணமாகும். எனவே கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாக பேசவும் காரணமாக இருந்த வி.கே.சசிகலா மீதும், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்மநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். 
புகாரின்படி வி.கே.சசிகலா உள்பட 501 பேர் மீது 506(1)-கொலை மிரட்டல், 507- எங்கு இருந்து பேசுகிறோம் என்று குறிப்பிடாமல் அநாகரிகமாக பேசுதல், 109-அடுத்தவரை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், 67 (IP ACT)-தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலான தகவலை பதிவிடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story