விருத்தாசலத்தில் அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம் அபாய சங்கிலியை இழுத்த ராணுவ வீரரால் பரபரப்பு


விருத்தாசலத்தில் அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம்  அபாய சங்கிலியை இழுத்த ராணுவ வீரரால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 11:21 PM IST (Updated: 29 Jun 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த ராணுவ வீரர் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

விருத்தாசலம், 

மதுரை- ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் இடையே  வாராந்திர அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட அனுராத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் பிகானீரில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது நேற்று மதியம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.44 மணிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து 1.46 மணிக்கு புறப்பட்டது. 

நடுவழியில் நிறுத்தம்

ரெயில் நிலையத்தையொட்டி அமைந்துள்ள எருமனூர் ரெயில்வே கேட் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ரெயில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.  இதனால், ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டதாக நினைத்து ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக நடுவழியில் ரெயிலை நிறுத்தினார்.

  உடன் டிக்கெட் பரிசோதகர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தவர் குறித்து விசாரித்தார். அதில் அவர்  ராணுவ வீரர் ஒருவர் என்பது தெரியவந்தது. அவரிடம் ரெயிலை நிறுத்தியதற்கான காரணம் குறித்து டிக்கெட் பரிசோதகர் கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை.

காலதாமதம் 

இதற்கிடையே, விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்மித், தனிப் பிரிவு தலைமை காவலர் ராம்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். 

அப்போதும் அந்த நபர் சரியான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து, அவரை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளரிடம் ஒப்படைக்கப் போவதாக கூறிய டிக்கெட் பரிசோதகர், அவரை அந்த ரெயிலிலேயே அழைத்து சென்றார்.


இதன் மூலம் சுமார் 15 நிமிடம் தாமதத்துக்கு பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story