விழுப்புரம் அருகே சொத்து பிரச்சினையில் தொழிலாளி அடித்துக் கொலை உறவினர் கைது


விழுப்புரம் அருகே சொத்து பிரச்சினையில் தொழிலாளி அடித்துக் கொலை உறவினர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 11:21 PM IST (Updated: 29 Jun 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே சொத்து பிரச்சினையில் கூலித்தொழிலாளியை அடித்துக்கொலை செய்த அவரது உறவினர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

தொழிலாளி

விழுப்புரம் அருகே உள்ள தென்குச்சிப்பாளையம் சின்னபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் ஜானகிராமன் (வயது 45), கூலித்தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் வரதராஜன் (45) என்பவரும் பங்காளிகள் ஆவர்.
இவர்கள் இருவருக்கும் பூர்வீக சொத்தாக 7 சென்ட் வீட்டுமனை உள்ளது. இதனை பாகப்பிரிவினை செய்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதன் காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

அடித்துக் கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜானகிராமன், தென்குச்சிப்பாளையம் மந்தக்கரையில் உள்ள ரேஷன் கடை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வரதராஜன், ஜானகிராமனை வழிமறித்து வீட்டுமனை சம்பந்தமாக பேசியுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வரதராஜன், அருகில் கிடந்த ரீப்பர் கட்டையை எடுத்து ஜானகிராமனை சரமாரியாக தாக்கினார். இதில்  பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 கைது

இதுகுறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், கொலை செய்யப்பட்ட ஜானகிராமனின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ஜானகிராமனுக்கு சரோஜா (40) என்ற மனைவியும், சிவசக்தி (25), ஜெயசக்தி (20) என்ற 2 மகள்களும் உள்ளனர்.


Next Story