சேத்தியாத்தோப்பு அருகே ரேஷன் கடைக்கு படையலிட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்


சேத்தியாத்தோப்பு அருகே ரேஷன் கடைக்கு படையலிட்டு கிராம மக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2021 11:23 PM IST (Updated: 29 Jun 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே ரேஷன் கடைக்கு படையலிட்டு கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேத்தியாத்தோப்பு, 

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் குமாரக்குடி, காவாலக்குடி, கூடலையாத்தூர் பகுதியில் 5 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது.

இதில் சேத்தியாத்தோப்பு அருகே கூடலையாத்தூரில் உள்ள ரேஷன் கடையின் மூலம் 400-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 

இந்த கடை முறையாக திறக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு மாதத்துக்கு 5 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் இந்த கடையை சார்ந்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நூதன போராட்டம் 

தற்போது தமிழக அரசு வழங்கிய கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்குவதற்கு கூட 3 நாட்கள் மட்டும் கடை திறக்கப்பட்டது, அதன்பின்னர் திறக்கப்படவில்லை. 

இதனால் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதை கண்டித்து, கிராம மக்கள் நேற்று ரேஷன் கடை முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ரேஷன் கடை முன்புள்ள இரும்பு கதவுக்கு மாலை அணிவித்து, வாழைப்பழங்கள்  வைத்து ஊதுபத்தி மற்றும் கற்பூரம் ஏற்றி படையலிட்டனர். அப்போது அங்கிருந்த கிராம மக்கள் கடை எப்படியாவது திறக்கப்பட்டு, தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட வேண்டும் என்று வேண்டி கைகூப்பி வணங்கினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story