பின்னலாடை உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கைத்தறிதுறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.
பின்னலாடை உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கைத்தறிதுறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.
ஆய்வு கூட்டம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பின்னலாடை உற்பத்தி சங்கத்தினருடன் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கைத்தறி துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ், காதி மற்றும் கதர் கிராம வாரிய நிர்வாக அதிகாரி சங்கர், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் பொன். ராஜேஷ், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடவடிக்கை
கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-
கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்னலாடை உற்பத்தி சங்கத்தினருடன் ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்பினால் பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து உற்பத்தியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதனை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
கணபதிபாளையம் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் பருத்தி, கோரா காட்டன், மென்பட்டு ரக சேலைகள் உற்பத்தி நடக்கிறது. கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.13 லட்சத்து 42 ஆயிரம் லாபம் ஈட்டியுள்ளது.
திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடை மூலம் சர்வதேச அளவில் இந்திய நாட்டின் அன்னிய செலாவணி உயர்ந்து வருகிறது. பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் மிகுந்த பாதுகாப்புடன் இருந்து நோய் தொற்று பாதிப்பு இல்லாத வகையில் பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சர் பாராட்டு
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். கொரோனாவால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி குறைந்து பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சிரமப்பட்டனர். இந்த நிலை மாறி ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீதமும், உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் 33 சதவீதம் பணியாளர்களுடன் தற்போது இயங்கி வருகிறது. பின்னலாடை உற்பத்தி சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் உயர் தொழில்நுட்பப் பூங்காவை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து அரசு நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், குமார் நகரில் உள்ள கதர் கிராம தொழில்கள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய கிடங்கில் இருப்பிலுள்ள கதர் மற்றும் பாலியஸ்டர் ரகங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். கதர் விற்பனையை விளம்பரப்படுத்த வேண்டுமென்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
உபகரணங்கள்
மேலும் கணபதிபாளையம் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 60 கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் தலா ரூ.3 ஆயிரம் மதிப்பில் மின் மோட்டாருடன் கூடிய தார் சுற்றும் உபகரணங்களை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அலுவலர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள், சாயப்பட்டறை உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், பல்லடம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சோமசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் ராஜசேகரன், கீர்த்தி சுப்பிரமணியம், நெசவு பூங்கா தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story