தடங்கத்தில் அரசு புதிய வீடு கட்டி தரக்கோரி காலனி மக்கள் கோவிலில் குடியேறி போராட்டம் அதிகாரிகள் நேரில் பேச்சுவார்த்தை
நல்லம்பள்ளி அருகே தடங்கத்தில் பழுதடைந்த காலனி வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தரக்கோரி காலனி மக்கள் நேற்று கோவிலில் குடியேறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நல்லம்பள்ளி:
தடங்கம் காலனி
நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் ஊராட்சிக்குட்பட்டது தடங்கம் காலனி. இந்த காலனியில் கடந்த 1982-ம் ஆண்டு 35 வீடுகளை அரசு கட்டி கொடுத்தது. இதில் ஏழை, எளிய, பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த காலனி வீடுகள் தற்போது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. குறிப்பாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருவதுடன், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் காலனி வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வீட்டுக்கு வெளியே சமையல் செய்து குடும்பம் நடத்தி வரும் அவல நிலையில் அங்கு மக்கள் உள்ளனர்.
எனவே பழைய வீடுகளை இடித்து அகற்றி விட்டு புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும், குறைகள் தொடர்பாக புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கோவிலில் குடியேறும் போராட்டம்
இதையடுத்து நேற்று அந்த பகுதியில் 35 வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகளுடன் வீடுகளில் இருந்து வெளியேறி அதே ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அவர்கள் அடுப்பு கூட்டி தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களை பயன்படுத்தி உணவை சமைக்க தொடங்கினர். இந்த போராட்டம் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று, குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்தனர். இதையடுத்து கோவிலில் குடியேறும் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த திடீர் போராட்டம் தடங்கம் காலனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story