மணல் கடத்தல்; 2 பேர் கைது
மணல் கடத்தல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வெண்மான்கொண்டான் கிராம நிர்வாக அலுவலர் மனோகரனுக்கு, அப்பகுதியில் உள்ள ஓடையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற அவர், டிராக்டருடன் டயர் வண்டியை இணைத்து மணல் கடத்திய நபரை பிடித்து உடையார்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த சரவணன்(வயது 30) என்பது தெரியவந்தது. வண்டியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிந்து, சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் அரியலூர் மாவட்ட உதவி புவியியலாளர் மற்றும் சுங்கத்துறை ஆய்வாளர் நாகராஜன், நேற்று உடையார்பாளையம்- ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கனரக லாரிகளை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதியின்றி எம்.சாண்ட் (கனிம மண்) கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில், நாகராஜன் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மண் கடத்தல் தொடர்பாக காட்டுமன்னார்குடி அருகே உள்ள குருவாடி கிராமத்தை சேர்ந்த வேல்முருகனை(36) கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story