அழிக்காலில் 2-வது நாளாக கடல் சீற்றம்


அழிக்காலில் 2-வது நாளாக கடல் சீற்றம்
x
தினத்தந்தி 30 Jun 2021 1:38 AM IST (Updated: 30 Jun 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

அழிக்காலில் 2-வது நாளாக கடல் சீற்றமாக இருந்ததால், 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்தது.

ராஜாக்கமங்கலம்:
அழிக்காலில் 2-வது நாளாக கடல் சீற்றமாக இருந்ததால், 100-க்கும். மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்தது. 
கடல் சீற்றம்
குமரி மாவட்ட கடல் பகுதி ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். இதில் தாழ்வான பகுதியான அழிக்காலில் கடல் சீற்றம் அதிகளவில் இருக்கும்.
இங்கு சுமார் 600 வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் அழிக்காலில் கடல் சீற்றம் ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்தது. 2-வது நாளான நேற்றும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. அதைத்தொடர்ந்து  100-க்கும். மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்தது. அந்த வீடுகளில் வசிப்போர் ஆங்காங்கே உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீட்டு உபயோக பொருட்கள் கடல்நீரால் நாசமடைந்தது.
அதிகாரிகள் ஆய்வு
இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை மேற்கொண்டனர். கணபதிபுரம் பேரூராட்சியினர் பொக்லைன் எந்திர உதவியுடன் ஆங்காங்கே தண்ணீர் வடிய வடிகால்களை ஏற்பாடு செய்து பூச்சிகொல்லி மருந்துகள் தெளித்தனர். முட்டத்தில் 2013-ம் ஆண்டு தனியார் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டபின் அழிக்கால் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும், அதை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் குடியிருப்பு பகுதியை ஒட்டியே பாம்புரி வாய்க்கால் செல்கிறது. இதில் மழை காலங்களில் அதிக வெள்ள பெருக்கு ஏற்படும்போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடும். ஆகவே மழை மற்றும் கடல் சீற்றம் ஆகிய இயற்கை பேரிடர்களுக்கு ஆளாகும் அழிக்கால் மீனவ கிராமத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை அரசு துரிதமாக எடுக்க வேண்டும் என்று அழிக்கால் ஊர் தலைவர் ஜோசப் மற்றும் ஊர் நிர்வாகக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழிக்காலில் வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க ஆங்காங்கே வீட்டின் முன் மணல் மூடைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

Next Story