பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க புதிதாக வாட்ஸ்அப் எண் அறிமுகம்; கலெக்டர் விஷ்ணு தகவல்


பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க புதிதாக வாட்ஸ்அப் எண் அறிமுகம்; கலெக்டர் விஷ்ணு தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2021 1:43 AM IST (Updated: 30 Jun 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க புதிதாக வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க புதிதாக செல்போன் வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

புதிய வாட்ஸ்அப் எண்

நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை 24 மணி நேரமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கும் வகையில் "நெல்லை வணக்கம்" 9786 566111 என்ற புதிய செல்போன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விஷ்ணு அறிமுகப்படுத்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் துரிதமாக போன் மூலம் வாட்ஸ்அப் மூலம் தங்களின் அடிப்படை வசதிகள் ரோடு வசதிகள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக எளிதான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 9786566111 என்ற எண்ணை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்.
இந்த எண்ணிற்கு வரும் குறைகள் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை மூலம் அந்தந்த துறைக்கு உடனடியாக அனுப்பப்படும். இதற்காக முக்கிய துறைகளின் அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்அப் குரூப் தொடங்கப்பட்டு கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் உடனடியாக அந்தந்த துறை தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படும். பொதுமக்களுக்கும் அந்த தகவல் தெரிவிக்கப்படும். புகார் தெரிவிப்பவர்களின் செல்போன் எண் ரகசியமாக காக்கப்படும்.

புகார்களுக்கு தீர்வு

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இதன் மூலம் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர். இந்த 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அப்படியே பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்படும். குறிப்பாக பட்டா மாற்றம் என்றால் 30 நாட்கள் அதன் அடிப்படையில் குறைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும். அடிப்படை வசதிகள், குடிநீர் பிரச்சினைகள், ரோடு வசதிகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். ஒவ்வொரு புகாரும் அந்தந்த கிராமம், தாலுகா வாரியாக பதிவு செய்யப்படும். இந்த புகார்களுக்கு அந்தந்த துறை தலைவர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து புகார்களுக்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர்) சுகன்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், பயிற்சி உதவி கலெக்டர் மகாலட்சுமி, கலெக்டர் அலுவலக மேலாளர் வெங்கடாசலம், தாசில்தார் கிருஷ்ணகுமார், தேசிய தகவல் மைய மேலாளர்கள் தேவராஜன், ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story