பாபநாசம் தலையணையில் மூழ்கிய பாலிடெக்னிக் மாணவர் பிணமாக மீட்பு


பாபநாசம் தலையணையில் மூழ்கிய பாலிடெக்னிக் மாணவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 1:52 AM IST (Updated: 30 Jun 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் தலையணையில் மூழ்கிய பாலிடெக்னிக் மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் தலையணையில் நண்பர்களுடன் குளித்த பாலிடெக்னிக் மாணவர் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய உடல் மீட்கப்பட்டது.

பாபநாசம் தலையணை

நெல்லை மாவட்டம் பாபநாசம் உலகம்மாள் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். பாபநாசத்தில் தரிசனம் செய்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
இங்கு வருபவர்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு செல்வார்கள். கோவிலுக்கு அருகில் மேலே உள்ள தலையணை என்னும் இடத்திலும் குளிக்கச் செல்வதுண்டு. அவ்வாறு குளிக்கும்போது தலையணையில் இருக்கும் ஆபத்தை அறியாமல் ஆழமான பகுதிக்கு சென்று பாறை இடுக்குகளில் சிக்கி அடிக்கடி உயிர்பலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தலையணை பகுதியை, பொதுமக்கள் குளிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது. இதையடுத்து அங்கு பொதுமக்கள் செல்ல முடியாதபடி சுவர் கட்டி உள்ளனர். ஆனால் மாற்று பாதை வழியாக சிலர் தலையணைக்கு சென்று நீச்சலடித்து குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பாலிடெக்னிக் மாணவர்

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் கஸ்பா சுப்பிரமணியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் அஸ்வின் (வயது 19). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அஸ்வின் தனது நண்பர்கள் 4 பேருடன் பாபநாசம் தலையணையில் குளிக்க சென்றார்.
அப்போது அஸ்வின் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த அவரது  நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அஸ்வினை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்ெ்தாடர்ந்து சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணு மற்றும் போலீசார் சென்றனர். அம்பை தீயணைப்பு நிலைய வீரர்களும் அங்கு வந்தனர். அவர்கள் அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

உடல் மீட்பு

ஆனால் நேற்று முன்தினம் இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் நேற்று காலை ஆற்றில் தேடும் பணி நடந்தது. அப்போது அங்குள்ள பாறை இடுக்கில் அஸ்வின் பிணம் இருந்ததை கண்டனர். தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட அவர் பாறை இடுக்கில் சிக்கி இறந்தது தெரியவந்தது. உடனே தீயணைப்பு மீட்பு குழுவினர் அஸ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஸ்வினுக்கு பிரேமலதா என்ற தாயாரும், ஆதி என்ற தம்பியும் உள்ளனர்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story