அண்டை மாநிலங்களை போல் கர்நாடகத்திலும் மாநில கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்


அண்டை மாநிலங்களை போல் கர்நாடகத்திலும் மாநில கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Jun 2021 2:19 AM IST (Updated: 30 Jun 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

அண்டை மாநிலங்களை போல் கர்நாடகத்திலும் மாநில கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உரிமைகளை காக்க முடியாது

  கர்நாடகத்தில் ஒரு சிலரை தவிர பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளுக்கு மாநில பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வம் இல்லை. மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்பது இல்லை. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள இதை நாம் இன்று எதிர்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. இந்த 2 கட்சிகளும் ஒன்று ஆளுங்கட்சியாக, மற்றொன்று எதிர்க்கட்சியாக இருக்கின்றன.

  மேகதாது போன்ற பிரச்சினை வரும்போது அந்த 2 கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. அங்குள்ள ஒற்றுமை கர்நாடகத்தில் இல்லை. இது துரதிர்ஷ்டம். மத்திய அரசால் கர்நாடகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு நிற்காவிட்டால் நமது உரிமைகளை காக்க முடியாது. மத்திய அரசின் இந்த புறக்கணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், மாநில கட்சியை மக்கள் ஆதரிக்க அளிக்க வேண்டும்.

மக்கள் ஆதரிக்கிறார்கள்

  மற்ற தென்மாநிலங்களை போல் வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் தேசிய கட்சிகளை புறக்கணித்து ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும். டெல்லியில் அமர்ந்து இங்கு ஆட்சி செய்வதை மக்கள் விரும்பக்கூடாது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மாநில கட்சிகளை தான் மக்கள் ஆதரிக்கிறார்கள்.

  அதனால் அண்டை மாநிலங்களை போல் கர்நாடகத்தில் மாநில கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஆதரித்தால் மக்களின் மண்டல அடையாளம், உரிமைகளை காக்க முடியும். மாநில கட்சிகள் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்றன. மக்களுக்கு உதவிகளை செய்கின்றன. அதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சியை மக்கள் ஆதரித்தால் அவர்களின் நலனுக்காக நாங்கள் போராடுவோம்.

குரல் எழுப்பியது

  கர்நாடகத்தை இதுவரை ஆட்சி செய்த காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சிகள் மாநிலத்தின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. அவற்றை புறக்கணித்து உள்ளன. அது மொழியாக இருந்தாலும் சரி, நிலமாக இருந்தாலும் சரி, நீர் பிரச்சினையாக இருந்தாலும் சரி. அனைத்து பிரச்சினைகளிலும் கர்நாடகத்தை தேசிய கட்சிகள் அலட்சியப்படுத்தி உள்ளன.

  மாநில பிரச்சினைகளுக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கவில்லை. காசர்கோட்டில் கிராமங்களுக்கு கன்னட பெயர்களை மாற்றும் விவகாரம் குறித்து அக்கட்சி பேசவில்லை. கர்நாடகத்தின் அடையாளத்தை காக்கும் பொருட்டு ஜனதா தளம் (எஸ்) கட்சி குரல் எழுப்பியது. அதனால் கேரளா முதல்-மந்திரி, கிராமங்களின் பெயர்களை மாற்ற அரசு முயற்சி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போதைக்கு முடிவுக்கு வராது

  தலித் சமூகத்தை சேர்ந்த தலைவரை முதல்-மந்திரி ஆக்குவது குறித்து காங்கிரசில் பேசப்படுகிறது. கூட்டணி ஏற்பட்டதை அடுத்து கடந்த 2008, 2018-ம் ஆண்டு மல்லிகார்ஜுன கார்கேவை முதல்-மந்திரி ஆக்குங்கள் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. இப்போது அதுபற்றி பேசுகிறர்கள். 

காங்கிரசில் தற்போது பழைய காங்கிரசார், புதிய காங்கிரசார் விவகாரம் எழுந்துள்ளது. இந்த பிரச்சினை தற்போதைக்கு முடிவுக்கு வராது. ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முதுகில் குத்தியவர்களால் (சித்தராமையா) காங்கிரஸ் சிக்கல்களை எதிர்கொள்ளும்.
  இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story