மூதாட்டியை உயிருடன் எரித்து கொன்ற மருமகள், கள்ளக்காதலன் கைது


மூதாட்டியை உயிருடன் எரித்து கொன்ற மருமகள், கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 30 Jun 2021 2:48 AM IST (Updated: 30 Jun 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, மருமகள், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலை கண்டித்ததால் 2 பேரும் சேர்ந்து மூதாட்டியை உயிருடன் எரித்து கொன்றது அம்பலமாகி உள்ளது.

துமகூரு:

தற்கொலை

  துமகூரு மாவட்டம் சிரா தாலுகா உஜ்ஜனகுண்டே கிராமத்தை சேர்ந்தவர் சரோஜம்மா(வயது 65). இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த சரோஜம்மா உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

  இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உடல்நலக்குறைவு காரணமாக சரோஜம்மா தீக்குளித்து தற்கொலை செய்ததாக தெரியவந்தது. மேலும் சரோஜம்மா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

கிடுக்கிப்பிடி விசாரணை

  இந்த நிலையில் சரோஜம்மாவின் மருமகன் பிரேம்குமார் தாவரகெரே போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் எனது அத்தை சரோஜம்மா தற்கொலை செய்யவில்லை. அவரை யாரோ உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்த சந்தர்ப்பத்தில் சரோஜம்மாவின் மருமகள் சுதாமணி(28) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் போலீசார் சரோஜம்மா இறந்தது குறித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் சுதாமணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

மருமகள் கைது

  அப்போது சரோஜம்மாவை தனது கள்ளக்காதலன் ஸ்ரீரங்கப்பாவுடன் சேர்ந்து எரித்து கொலை செய்ததை சுதாமணி ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஜவகொண்டஹள்ளியை சேர்ந்த ஸ்ரீரங்கப்பா(35) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான சுதாமணியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

  அதாவது சரோஜம்மாவின் மகனின் மனைவி தான் சுதாமணி ஆவார். ஸ்ரீரங்கப்பா துணி வியாபாரம் செய்து வருகிறார். அவர் துணியை விற்க அடிக்கடி உஜ்ஜனகுண்டே கிராமத்திற்கு வந்து உள்ளார். அப்போது சுதாமணிக்கும், ஸ்ரீரங்கப்பாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கள்ளக்காதலை கைவிடும்படி...

  இதனால் உஜ்ஜனகுண்டே கிராமத்திற்கு வரும் போது எல்லாம் சுதாமணியுடன், ஸ்ரீரங்கப்பா உல்லாசமாக இருந்து வந்து உள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சரோஜம்மாவுக்கு தெரியவந்து உள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்த அவர் சுதாமணியை கண்டித்து உள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிடும்படி எச்சரித்து உள்ளார்.

  ஆனால் சரோஜம்மா உயிருடன் இருந்தால் கள்ளக்காதலை தொடர முடியாது என்று நினைத்த சுதாமணி, சரோஜம்மாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதுகுறித்து அவர் ஸ்ரீரங்கப்பாவிடமும் கூறி இருந்தார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த சரோஜம்மா மீது பெட்ரோலை ஊற்றி சுதாமணியும், ஸ்ரீரங்கப்பாவும் தீ வைத்து உள்ளனர். இதில் அவர் உடல்கருகி இறந்தது தெரியவந்தது. ஆனால் போலீசிடம் இருந்து தப்பிக்க உடல்நலக்குறைவு காரணமாக சரோஜம்மா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி சுதாமணி நாடகமாடியதும் அம்பலமானது.

பரபரப்பு

  கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலை கண்டித்த மாமியாரை உயிருடன் எரித்து கொலை செய்த மருமகள் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் துமகூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story